உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில பாப் பாடகரான எட் ஷீரன் உடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கைகோர்க்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகர் எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார். இவரது ஆல்பம் பாடல்கள் ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கில் பார்வைகளை பெறக்கூடியவை. இவருடைய ‘ஷேப் ஆஃப் யூ’ பாடல் மொழிகள் கடந்து சர்வதேச அளவில் கொண்டாப்படுகிறது. அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த எட் ஷீரன், ’சஃப்பையர்’ என்ற பாடலை படமாக்கினார். இந்த பாடலும் பெரும் வைரலானது. இதில் ஷாருக்கான் தோன்றியிருந்தார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் சர்வதேச அளவில் ஒரு கூட்டணி அமைக்கப்போவதாக தெரிவித்திருந்தார். பலரும் அது குறித்து ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். இதனையடுத்து சில மணி நேரம் கழித்து மற்றொரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் எட் ஷீரன், ஹனுமான்கைண்ட், தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைய உள்ளதாகவும், இதனை தானே தயாரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ள ஹனுமான்கைண்ட் என்பவர் கேரளாவைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் ஆவார். இவரது ஆல்பம் பாடல்கள் உலக அளவில் பிரபலமாக இருப்பவை.
Ed Sheeran – Dhee – HanumanKind – Santhosh Narayanan . Proud to have produced and performed this one
— Santhosh Narayanan (@Music_Santhosh) October 13, 2025