சென்னை: பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் துல்கர் சல்மான், அவரது தந்தை மம்முட்டியின் வீடு, அலுவலகம் உட்பட தமிழகம், கேரளாவில் மொத்தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயர்களில் ஒருவர் துல்கர் சல்மான். பிரபல நடிகர் மம்முட்டியின் மகனான இவர், தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில், துல்கர் சல்மான் போலி ஆவணங்கள் மூலமாக சொகுசு கார்களை குறைந்த விலைக்கு வாங்கியதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து, அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், பூடான் நாட்டு ராணுவம் பயன்படுத்திய ‘லேண்ட் ரோவர்’ போன்ற பழைய சொகுசு கார்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதை இந்தியாவில் மறுபதிவு செய்து, வரிஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, துல்கர் சல்மான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள துல்கர் சல்மான் வீடு, அவரது தந்தை மம்முட்டியின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்தது. தமிழகம், கேரளாவில் நேற்று ஒரே நேரத்தில் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையில், சொகுசு கார்கள் இறக்குமதி செய்ததற்கான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், கார்கள் விற்பனை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. சோதனை முடிவடைந்த பிறகே, முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.